குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
மகாராஷ்டிர மாடல் அச்சத்தால்.. அணி மாறுவாரா நிதீஷ் குமார்?
மகாராஷ்டிரத்தைப் போல, பேரவைத் தேர்தலில், பாஜக தலைவரை முதல்வராக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அணி மாறிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்குக் காரணம், இந்தியா கூட்டணியில் நிதீஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் இணையலாம். அவருக்காகக் கதவுகள் திறந்தே உள்ளன என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் கூறியிருந்தது குறித்து, பிகார் முதல்வர் நிதீஷ், நேரடியாக பதிலளிக்காமல், மறைமுகமான பதிலையே கொடுத்துள்ளார்.
அதாவது, புதன்கிழமை, செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், ஒருவேளை, நிதீஷ் குமார் எங்களுடன் இணைய வேண்டும் என்றால், நிச்சயம் நாங்கள் அவரை வரவேற்போம். ஏற்கனவே அவர் செய்த தவறுகளை மறந்துவிடுவோம், எங்களுடன் அவரை வைத்துக்கொள்வோம், ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம், எப்போதும் நாம் நல்ல முடிவைத்தான் எடுக்க வேண்டும். ஆனால், அவரால் நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து, நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் என்ன சொல்லியிருந்தாலும் அதனை விட்டுத்தள்ளுங்கள் என்று பதிலாளித்தார். நான் இந்தியா கூட்டணிக்குச் செல்ல மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இதற்கிடையே, பிகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் பேரவைத் தேர்தல் நடப்பதால், முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் தொடர்வாரா அல்லது மகாராஷ்டிரத்தைப் போல பாஜக தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, இது குறித்து தொலைக்காட்சிகளுக்கு பதிலளிக்க முடியாது. பாஜக ஒரு கட்டுக்கோப்பான கட்சி, பாஜக நாடாளுமன்றக் குழுதான் அதனை முடிவெடுக்கும் என்று கூறியிருந்த நிலையில், நிதீஷ் குமாரின் இந்த மறைமுக பதிலும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.