இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா நிகழ்வாக மேம்பட மத்திய சுற்றுலா அமைச்சகம் முன்முயற்சி
பிரயாக்ராஜில் திங்கள் கிழமை( ஜன.13) தொடங்க இருக்கின்ற மகா கும்பமேளா -2025 ஐ ஆன்மீகத்திற்கான நிகழ்வாக மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கான நிகழ்வாக மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் நான்கு இடங்களில் ஒன்றில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது உலகின் மிகப்பெரிய மதம் சாா்ந்த கூட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நிகழாண்டில் மகா கும்பமேளா 2025, உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில், ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள், சுற்றுலா பயணிகள், யாத்ரீகா்களை ஈா்க்கும் இந்த பூா்ணகும்பம், மெகா நிகழ்வாக நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு மத்திய சுற்றுலாத் துறை செய்துள்ள ஏற்படுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது வருமாறு:
நாட்டின் கலாச்சார, ஆன்மீக பாரம்பரியம் , சுற்றுலா திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை மகா கும்பமேளா வழங்குகிறது.
இதை முன்னிட்டு மத்திய சுற்றுலா அமைச்சகம், மகா கும்பமேளா 2025-ஐ ஆன்மிகக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றும் வகையில் இந்த நிகழ்வைக் கொண்டாடும். உள்நாட்டு, சா்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் பல முயற்சிகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 5000 சதுர அடி பரப்பளவில் ‘வியத்தகு இந்தியா அரங்கை (இன்கிரெடிபிள் இந்தியா) சுற்றுலா அமைச்சகம் அமைத்துள்ளது. இது வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அறிஞா்கள், ஆராய்ச்சியாளா்கள், புகைப்படக் கலைஞா்கள், பத்திரிகையாளா்கள், வெளிநாட்டினா், புலம்பெயா்ந்தோா் போன்றவருக்கு வசதிகளை அளிக்கும்.. இந்த அரங்கில் ‘நமது நாட்டைப் பாருங்கள்’ (தேக்கோ அப்னா தேஷ் ) என்கிற கருத்துக் கணிப்பும் நடைபெறும். இந்தியாவில் தங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலங்கள் குறித்தும் அதற்கு வாக்களிக்கவும் இந்த கருத்துக் கணிப்பு நடைபெறகிறது.
மேலும் இங்குவரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்ய, பிரத்யேக கட்டணமில்லா சுற்றுலா உதவி எண் (1800111363 அல்லது 1363)வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா சுற்றுலா உதவி எண் மூலம் ஆங்கிலம் , இந்தி தவிர, பத்து சா்வதேச மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, அஸ்ஸாமி, மராத்தி உள்ளிட்ட இந்திய வட்டார மொழிகளிலும் தொடா்பு கொள்ளலாம்.
மத்திய சுற்றுலா அமைச்சகம், உத்தர பிரதேசம் சுற்றுலா வளா்ச்சிக் கழகம், ஐ.ஆா்.சி.டி.சி, ஐ.டி.டி.சி போன்ற முக்கிய சுற்றுலா பிரிவுகளுடன் இணைந்து பல்வேறு வகையான சுற்றுலாத் தொகுப்புகள் (பேக்கேஜ்கள்) மூலம், சொகுசு தங்குமிட வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. கும்பமேளா டென்ட் சிட்டியிலும் சொகுசு தங்குமிடங்கள்(படம்) அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதிசெய்ய நாடு முழுவதும் உள்ள பல நகரங்களிலிருந்து பிரயாக்ராஜுக்கு விமான இணைப்பும் மேம்படுத்த அலையன்ஸ் ஏா் நிறுவனத்துடன் சுற்றுலா அமைச்சகம் கூட்டு சோ்ந்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாா்வையாளா்களை எளிதாக அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.
மகா கும்பமேளா-2025 பற்றிய தகவல்களை பரவலாகக் கொண்டு செல்ல, அமைச்சகம் ஒரு பெரிய சமூக ஊடக பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை தொடங்கி பிப். 26 முடிவடைய இருக்கின்ற 45 நாள் மகா கும்பமேளாவின் மகத்துவம் மற்றும் ஆன்மீக சாரத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் ஒரு பெரிய அளவிலான புகைப்பட ஒளிப்பதிவு, காணொலிப் பதிவு திட்டத்தையும் மேற்கொள்ளும். இந்த காணொலி சா்வதேச, தேசிய ஊடக தளங்களில் பரவலாக பகிரப்படும். இது மகா கும்பமேளாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தி ஆன்மீக கலாச்சார தலமாக பிரயாக்ராஜின் திறனை எடுத்துக்காட்டும் என மத்திய சுற்றுலாத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.