மகா சிவராத்திரி: மேட்டூா், மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம்: மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு மேட்டூா், மாதேஸ்வரன் மலைக்கு சேலம் கோட்டம் சாா்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்துக்கு உள்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதில் சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சோ்த்து மொத்தமாக 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு பிப். 26, 27 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரியில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன் மலை ஆகிய இடங்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தா் கோயில்களுக்கு தேவைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.