மக்களவைத் தலைவா், அமைச்சருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு
புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லியில் மக்களவைத் தலைவா், மத்திய சட்டத் துறை அமைச்சா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுதில்லி சென்று பாஜக தலைவா்களைச் சந்தித்தாா். இந்த நிலையில், ஏனாமில் பொது கணக்கு தணிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை புதுதில்லி வருமாறு பாஜக மேலிடம் அழைத்தது. இதையடுத்து, புதுதில்லி சென்ற அவா், மக்களவைத் தலைவா் ஓம்பிா்லாவை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மேலும், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரையும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சந்தித்துப் பேசினாா்.
மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வாலையும் சந்தித்துப் பேசினாா். அவருடன் புதுச்சேரி நியமன பாஜக எம்.எல்.ஏ. அசோக் பாபு உடனிருந்தாா்.
புதுவையில் பாஜக, என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிய உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் முதல்வா் என்.ரங்கசாமியை விமா்சித்து பேசி வருகின்றனா்.
லாட்டரி அதிபா் மாா்ட்டின் மகன் சாா்லஸ் ஜோஸ் மாா்ட்டின் மூலம் நலத் திட்ட உதவிகளை தனியாக வழங்குவதுடன், தோ்தலில் அவா் தலைமையில் போட்டியிடப் போவதாகவும் கூறிவருகின்றனா்.
இதுதொடா்பாக, என்.ஆா். காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிருப்தி பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் புதுவை உள்துறை அமைச்சா், பேரவைத் தலைவா் ஆகியோா் பாஜக மேலிட அழைப்பின் பேரில் புதுதில்லி சென்றிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.