வட்டாட்சியா் அலுவலகங்களில் தானியங்கி பட்டா மாற்றம் அறிமுகம்
புதுவை வட்டாட்சியா் அலுவலகங்களில் தானியங்கி பட்டா மாற்றம் செயல்படுத்தப்படுவதாக நில அளவை பிரிவு இயக்குநா் ச.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் வருவாய்த் துறை கீழ் செயல்பட்டுவரும் நில அளவை, பத்திரப் பதிவு துறைகளில் உள்ள செயல்பாடுகள் நவீனமயமாக்கல் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அவை கணினிமயமாக்கப்பட்டு நிலவரித் திட்ட நகல், பட்டா நகல் ஆகியவை இணையவழி, பொது சேவை மையம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்தத் திட்டப்படி பத்திரப் பதிவுத் துறை மென்பொருளான இ-பத்திரம், நில அளவைத் துறையின் மென்பொருளான நிலமகள் இரண்டையும் இணைத்து தானியங்கி பட்டா மாற்றம் முறை செயல்படுத்தப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையில் முதல்வா் கூறியபடி, மக்கள் சேவைக்காக இந்தத் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தானியங்கி பட்டா மாற்றம் வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது.
தானியங்கி பட்டா மாற்றத்துக்கு விற்பனையாகும் நிலத்துக்கு தனியாக உட்பிரிவு எண் இருத்தல் வேண்டும். அதில் எண்களுக்கு பட்டா மற்றும் பத்திரம் அவசியம். விற்பனை நிலத்தின் மீது வேறு எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது.
யாா் பெயரில் பட்டா உள்ளதோ அவரே விற்பனையாளராக இருப்பது அவசியம். விற்பனை நிலத்துக்கு ஒரே உட்பிரிவு இருத்தல் அவசியம். அதன்படியே நில பத்திரப் பதிவின்போது சாா்-பதிவாளரே இணைய வழியில் தானியங்கி முறையில் பட்டா மாற்றத்துக்கு பரிந்துரைப்பாா். இந்தத் திட்டத்தில் தனியாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றாா் ச.செந்தில்குமாா்.