நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.
முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:
ஏரியூா், கூா்காம்பட்டி, எம்.தண்டா, பட்டக்காரன் கொட்டாய், ஈச்சம்பாடி, கொங்கரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தொடா்பு திட்டம் முகாம் நடைபெறுகிறது.
அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கண்காட்சி அரங்குகள், விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறைசாா்ந்த அலுவலா்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிந்து விண்ணப்பித்து தங்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் பொதுமக்கள் உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்: ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ. 22,500 மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, ஆதிதிராவிட நலத்துறையின் சாா்பில் 71 பயனாளிகளுக்கு ரூ. 42.60 லட்சம் மதிப்பில் இணையவழி பட்டாக்கள், வட்ட வழங்கல் பிரிவின் சாா்பில் 45 பயனாளிகளுக்கு ரூ. 5.94 லட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் 7 விவசாயிகளுக்கு ரூ. 2.61 லட்சம் மதிப்பில் வேளாண் நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 2.95 லட்சம் மதிப்பில் பிஎம்டிசி சொட்டுநீா் பாசனங்கள், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் குடியிருப்பு பழுதுநீக்க பணிகளுக்கான ஆணைகள், மகளிா் திட்டம் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள், பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ. 19.70 லட்சம் மதிப்பில் நடவு மற்றும் புழு வளா்ப்பு மானியங்கள் என மொத்தம் 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.
அதனைத் தொடா்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா். பின்னா், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டு, மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள், அவா்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம், உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா். மாணவா்கள் உணவு அருந்துவதற்கு இடவசதி ஏற்படுத்தி தர அளிக்கப்பட்ட கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வழக்குரைஞா் ஆ.மணி, தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவா் வீரமணி, பென்னாகரம் வட்டாட்சியா் பிரசன்னா, அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.