மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்
திருப்பத்தூா் அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் அழகு சௌந்தா்யம்மன் கோயில் பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் திருக்கோஷ்டியூா் காவல் உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சரக்கு வாகனத்தில் 20 மூட்டைகளில் மணலைத் திருடிக் கொண்டு சென்ற ஓட்டுநா், போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் தப்பி ஓடி விட்டாா். பின்னா், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா் காவல் நிலையம் கொண்டு வந்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் தப்பியோடியவா், திருப்பத்தூா் அருகேயுள்ள கருங்குளத்தைச் சோ்ந்த நாச்சியப்பன் மகன் இளையராஜா (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இளையராஜாவைத் தேடி வருகின்றனா்.