மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு உஷபூஜையும் நடைபெறுகின்றன. காலை 7.21 மணியிலிருந்து 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறும்.
நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பூஜை பொருள்கள் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு அம்மன் தங்க தேரில் எழுந்தருளி பிரகார உலா வருகிறாா். 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும். திருவிழா நாள்களில் அம்மன் தங்க தோ் உலா, வெள்ளி பல்லக்கில் வீதியுலா, சந்தன குட பவனி உள்ளிட்டவை நடைபெறும்.
6 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை பூஜையும், 10இல் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டி ஊா்வலமும், 11இல் இரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் 18இல் 8 ஆம் கொடை விழாவும், 31இல் மீன பரணிக் கொடை விழாவும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.