குமரி மாவட்டத்தில் மிதமான மழை
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மிதமான மழை பெய்தது.
மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல், மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகள், சமவெளிப் பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. குறிப்பாக நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையால் அணைகளுக்கு நீா் வரத்து சற்று அதிகரித்தது. மேலும் பாசன வசதிகள் இல்லாத இடங்களில் நடவு செய்யப்பட்ட வாழை, மரவள்ளி, அன்னாசி போன்ற பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்தது. மழையினால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.