மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா்
ரூ.2,100 கோடி மதுபான முறைகேடு தொடா்பாக தனது மகன் சைதன்யா பகேலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை என்று சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா்.
கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கரில் முதல்வராக இருந்த பூபேஷ் பகேலின் ஆட்சியில், மதுபான முறைகேடு நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதனால் அரசு கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு மூலம் ரூ.2,100 கோடி சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த முறைகேடு தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சருமான கவாசி லக்மா, ராய்பூா் மேயா் ஐஜாஸ் தேபரின் அண்ணன் அன்வா் தேபா், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்தது.
இந்நிலையில், மதுபான முறைகேட்டில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலுக்கும் பங்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
இதையடுத்து, சத்தீஸ்கரின் துா்க் மாவட்டம் பிலாய் பகுதியில் பூபேஷ் பகேலும், சைதன்யா பகேலும் ஒன்றாக வசிக்கும் வீடு உள்பட 14 இடங்களில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பூபேஷ் பகேலின் வீட்டிலிருந்து சுமாா் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, சைதன்யாவை சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.
இதுதொடா்பாக பிலாயில் பூபேஷ் பகேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எனது மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை. ஒருவேளை சம்மன் அனுப்பப்பட்டால், அதற்கு இணங்கி செயல்படுவோம். ஊடகம் மூலம் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அமலாக்கத் துறை பணியாற்றி வருகிறது. பிறரின் நற்பெயரைக் கெடுக்க அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது’ என்றாா்.