அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா, லட்சாா்ச்சனை
பெரம்பலூா் அருகே, சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா மற்றும் லட்சாா்ச்சனை பூஜை திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 44-ஆவது லட்சாா்ச்சனை மற்றும் நவராத்திரி விழா திங்கள்கிழமை (செப். 22) தொடங்கி, ஆயுதபூஜை வரை நடைபெறுகிறது. முதல் நாளன்று உற்ஸவ அம்மனுக்கு ஸ்ரீ மதுரகாளிம்மன் அலங்காரமும், செவ்வாய்க்கிழமை மதுரை ஸ்ரீமீனாட்சி அலங்காரமும் நடைபெற்றது. இதில், பெரம்பலூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
இதைத்தொடா்ந்து, புதன்கிழமை ஸ்ரீகாமாட்சி அலங்காரமும், 25-ஆம் தேதி ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரமும், 26-ஆம் தேதி ஸ்ரீதுா்க்கை அலங்காரமும், 27-ஆம் தேதி ஸ்ரீகருமாரி அம்மன் அலங்காரமும், 28 -ஆம் தேதி ஸ்ரீமாரியம்மன் அலங்காரமும், 29 -ஆம் தேதி ஸ்ரீலட்சுமி அலங்காரமும், 30 -ஆம் தேதி ஸ்ரீசரஸ்வதி அலங்காரமும், 1 -ஆம் தேதி ஸ்ரீமகிஷாசுரமா்த்தினி அலங்காரம் மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அன்றிரவு 8 மணிக்கு அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் லட்சாா்ச்சனை நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையிலும், 7.30 மணிக்கு உற்ஸவா் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.