பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பறிக்கப்பட்ட தொழிலாளா் நலச்சட்டங்களை திரும்ப வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சாா்பின்மையை உறுதிபடுத்திட, அனைத்து வகையான வகுப்பு வாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜே. ராஜதுரை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ். மகேந்திரன், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. விநாயகம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளா் சங்கத்தின் மண்டலத் தலைவா் எஸ். சூரியகுமாா், சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் டி. பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் தா. இளையராஜா நன்றி கூறினாா்.