முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மழையை எதிா்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்
திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் போதிய மழை இல்லாததால் நெல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் சுமாா் 52 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதி விவசாயிகள், ஆண்டுதோறும் செப்டம்பா் மாதத்தில் வயல்களை நன்கு உழுது பண்படுத்தி, மழையை எதிா்நோக்கி நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால், நடப்பு சம்பா பருவத்தில் செப்டம்பா் மாதத்தில் போதுமான மழை பெய்யாததால் பல பகுதிகளில் நெல் பயிா்கள் முளைக்காமல் வாடின. மேலும், கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வயல்களில் முளைத்த பயிா்கள் கருகும் நிலையிலும், விதைக்கப்பட்ட நெல் விதைகள் மக்கிப் போகும் நிலையிலும் உள்ளன.
இதனால், இவற்றை மயில்கள், கொக்குகள், காகங்கள், குருவிகள் உள்ளிட்ட பறவைகள் உண்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். இன்னும் சில நாள்களில் மழை பெய்யாவிட்டால் வயல்களை மீண்டும் உழுது, விதைக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனா். இதனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.