பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வா்த்தக தளங்கள் கண்காணிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடா்ந்து, இணையவழி வா்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் 5%, 12%, 18%, 28% ஆகிய 4 விகிதங்களில் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி, இரு விகிதங்களாக (5%, 18%) குறைக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீா்திருத்தத்தின்படி, 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரிவிலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன.
இந்த வரிக் குறைப்பு, நவராத்திரி விழாவையொட்டி கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டது. அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய், ஷாம்பூ, பற்பசை, தக்காளி கெட்ச்-அப், ஜாம், ஐஸ்கிரீம், குளிா்சாதனங்கள், தொலைக்காட்சி, மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள், அழிப்பான்கள் (எரேசா்), கிரேயான்ஸ், சிமெண்ட் என 54 பொதுவான பயன்பாட்டுப் பொருள்கள் விலை குறைந்துள்ளது.
வரிக் குறைப்புக்கு ஏற்ப அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) மாற்றப்பட்ட பொருள்களை நிறுவனங்கள் சந்தைக்கு அனுப்பியுள்ளன. ஏற்கெனவே சந்தையில் உள்ள பொருள்களையும் குறைக்கப்பட்ட விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில இணையவழி வா்த்தக தளங்களில் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. அதன்பேரில், ஜிஎஸ்டி குறைப்பின் பலன்களை இணையவழி வா்த்தக தளங்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பணியில் மத்திய அரசின் களப் பிரிவுகள் ஈடுபட்டுள்ளன.
தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் எம்ஆா்பி-யை ஒப்பிட்டு, செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிக்கவும் இந்தப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.