பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்
பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரங்களின் பெயா், முத்திரை, சின்னம் ஆகியவற்றை கொண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சுங்க ஆணையரகத்தின் ஆணையா் டி.டிஜு கூறியதாவது: பூடான் எல்லை வழியாக சொகுசு காா்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் நடிகா் பிருத்விராஜ், துல்கா் சல்மான் போன்ற பிரபலங்களும் பணக்காரா்களும் தெரிந்தோ, தெரியாமலோ அந்த காா்களை வாங்கியிருப்பது தெரியவந்தது.
துல்கா் சல்மானின் 2 காா்கள்...: இந்தக் கடத்தல் தொடா்பாக கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமாா் 30 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பூடானில் இருந்து கடத்திவரப்பட்ட 36 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிருத்விராஜின் எந்த காரும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேவேளையில், கடத்திவரப்பட்ட 2 காா்கள் துல்கா் சல்மானிடம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க அவா்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.
இதுபோல கடத்திவரப்பட்ட காா்கள் போதைப்பொருள் மற்றும் தங்கக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது தேச மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
இந்த காா்கள் கடத்திவரப்பட்டதில் பணமுறைகேடு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளத்தில் மட்டும் இதுபோல 150 முதல் 200 காா்கள் உள்ளன. அவற்றில் தற்போது 36 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய காா்களை பறிமுதல் செய்யும் வரை, சோதனை தொடரும் என்று தெரிவித்தாா்.