பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
நமது நிருபர்
பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தது.
அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்து, பின்னர் ஏமாற்றியதாக நடிகை ஒருவர் புகார் அளித்தார். இது தொடர்பாக மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மணிகண்டனுக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் 7.7.2021-இல் ஜாமீன் வழங்கியது. அதை எதிர்த்து நடிகை உச்சநீதிமன்றத்தில் 16.04.2022-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு 13.05.2022-இல் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சபரிஷ் சுப்பிரமணியன், "சென்னை உயர்நீதிமன்றம் எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்துவிட்டது. 8-7-2022 அன்று இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டனர். அதை ஏற்று வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது' எனக் கூறினார்.
ஆனால், நடிகை தரப்பில், பாலியல் வழக்குகளில் சமரசம் கிடையாது; சமரசம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல். வழக்கில் உயர்நீதிமன்றம் கூறிய கருத்துகள் தனது கண்ணியத்துக்கு எதிரானது. அதை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், "சென்னை உயர்நீதிமன்றம் சமரசம் தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தபோது, அதை எதிர்த்து ஏன் நீங்கள் மனு தாக்கல் செய்யவில்லை?. தற்போது நீதிமன்றத்தில் வந்து சமரசம் செய்ய ஒப்புக்கொளளவில்லை எனக் கூறுகிறீர்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்' என உத்தரவிட்டனர்.
அதேவேளையில், இந்த வழக்கை மூன்று ஆண்டுகளாக ஏன் பட்டியலிடவில்லை என்பதை உச்சநீதிமன்றப் பதிவாளர் விளக்க அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.