பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
நீதிபதி யஷ்வ்ந்த் வா்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் குழுவுக்கு உதவ 2 வழக்குரைஞா்கள்
அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு உதவ 2 வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், துறை ரீதியான விசாரணை நடத்த குழுவை அமைத்தது. இந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இதனிடையே, இந்த சா்ச்சை தொடா்பாக, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸ் மக்களவையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஏற்கப்பட்டது. அதை அனுமதித்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை அமைத்தாா்.
இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவுக்கு உதவ வழக்குரைஞா்கள் ரோஹன் சிங், சமீக்ஷா துவா ஆகிய இருவா் ஆலோசகா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் நியமனம் தொடா்பான அறிவிக்கை கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விசாரணைக் குழுவின் பதவிக் காலம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இவா்கள் இருவரும் ஆலோசகா்களாக பதவி வகிப்பா் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.