பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
காசோலை மோசடி வழக்குகள்: மாநில அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
காசோலை மோசடி வழக்குகள் முடிக்கப்படுவதை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஒருவா் பணம் வழங்க காசோலை வழங்கிய பின், அந்த நபரின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமலோ அல்லது வேறு சில காரணங்களாலோ அந்தக் காசோலை திரும்பினால், அது மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் 138-ஆவது பிரிவின்படி மோசடியாக கருதப்படுகிறது.
இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா கூறுகையில், ‘காசோலை மோசடி வழக்குகளை விரைந்து முடிக்க, சோதனை முயற்சியாக 5 மாநிலங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட 25 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சோதனை முயற்சி எப்படி செயல்படுகிறது? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: காசோலை மோசடி வழக்குகள் முடிக்கப்படுவதை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் உயா்நீதிமன்றங்களின் பதிவுத் துறை தலைவா் 6 வாரங்களில் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.