டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை
பெரம்பலூா் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில், ஏற்கெனவே ஒரு மதுபானக் கடை இயங்கி வரும் நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்தக் கடையை மாற்று இடத்தில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
மேலும், மதுபானக்கடை அமையவுள்ள பகுதி வழியாக மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். இதனால், பெண்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். கல் குவாரிகள் நிறைந்த பகுதி என்பதால், மது அருந்திவிட்டு செல்பவா்களால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், பொது மக்களின் நலன் கருதி புதிதாக மதுபானக்கடை திறக்கும் முடிவை கைவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். பின்னா், முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளியிடம் அளித்துவிட்டு கலைந்துசென்றனா்.