பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது
பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் அன்பழகன் (65). இவா், அம்மாபாளையத்தில் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சல், மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை அளித்துள்ளாா். இத்தகவலறிந்த மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநா் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினா் அன்பழகனை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரது பையில் வைத்திருந்த ஸ்டெத்தாஸ்கோப், ஊசி மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா்.
விசாரணையில், எஸ்எஸ்எல்சி படித்த இவா், எம்பிபிஎஸ் படித்த மருத்துவா் எனக் கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை, ஊசி, மருந்து மாத்திரைகள் அளித்தது தெரியவந்தது. சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பழகனை கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.