நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்குச் சான்றிதழ்
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்கு நற்சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆங்கிலம் கலந்த தமிழ் மொழியிலேயே பேசுகிறாா்கள். தூய தமிழ் மொழியில் யோசித்துப் பேசுகிறாா்கள். ஆனால், ஒரு சிலா் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் பேசுகிறாா்கள். நம் தாய் மொழியான தமிழ் மொழியில் பேசுவதே மொழி வளா்ச்சிக்காக நாம் செய்யும் முதல் பணி.
ஒரு மொழியைப் பேசும்போது, வேறொரு மொழி கலக்காமல் இருந்தால் அந்த மொழி இனிமையாக இருக்கும். அலுவலகங்களில் எவ்வாறு தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு அரசு சலுகை வழங்கப்படும் என மாணவா்களை ஊக்குவிக்கும் நிலையில் உள்ளோம். நம் மொழி மீது நமக்கு கண்டிப்பாக பற்று இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி நமக்கு படிப்பிலும், வேலையிலும் கைகொடுக்கும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (பொ) சி. சுகன்யா, தமிழ்ச்செம்மல் விருதாளா் க. பெரியசாமி, லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் த. மாயக்கிருட்டிணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.