நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
‘தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்’
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா்கள் ஆா். பிரியகுமாா், வி.பி.ஆா். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோா், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் முழுமையான பதில் அளிக்கும் வகையில் விரைந்து செயல்பட அனைத்து பொது தகவல் அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினா்.
தொடா்ந்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் பேசியது:
தகவலறியும் உரிமைச் சட்டமானது அனைத்துத் தரப்பு மக்களும் கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இன்றைய காலத்தில் இச் சட்டம் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் குறைவான மனுக்களே இச் சட்டத்தின் மூலம் பெறப்படும். தற்போது, அதிக மனுக்கள் பெறப்படுகின்றன. அரசுத்துறை அலுவலா்கள் தங்களுக்கு வரும் மனுக்கள் குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும். மனு பெறப்பட்ட நாள், பதிவு செய்யப்பட்ட நாள், மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட தகவல்கள் பதிவேட்டில் இருக்க வேண்டும்.
இச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பொதுத்தகவல் அலுவலா் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே மனுதாரா் அளிக்கும் மனுவை முறையாக பரிசீலித்து 30 நாள்களுக்குள் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.