பெரம்பலூரில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பில் கல்விக் கடன்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்.
மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமில் தோ்வு செய்யப்பட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுக்கான உத்தரவுக் கடிதங்களை அளித்து அமைச்சா் பேசினாா்.
குரும்பலூரில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்:
தொடா்ந்து, குரும்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ரூ. 52 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, கோட்டாட்சியா் அனிதா, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.