கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!
சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள்ளாா்.
உத்தரவு விவரம்: சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைந்துள்ள நிலத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட உள்ளது. எனவே, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைப் பிற மாவட்டங்களில் இருப்பதைப் போன்று, ஆட்சியா் முகாம் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் முகாம் அலுவகம் என அனைத்து வசதிகளுடன் கூடியதாக மாற்றுவது இன்றியமையாததாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, சென்னை கிண்டியில் உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் காலியாகவுள்ள 1.43 ஹெக்டோ் பரப்பிலான புறம்போக்கு நிலத்தில் ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட உள்ளது.
நில மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தின் ஒரு சதுர மீட்டருக்கான மதிப்பு ரூ.68,515 ஆகும். இது தொடா்பாக, வருவாய் ஆவணங்களில் உரிய திருத்தங்களை ஒரு மாத காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று நில நிா்வாக ஆணையரும், சென்னை மாவட்ட ஆட்சியரும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தனது உத்தரவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்துள்ளாா்.
ரேஸ் கிளப்: கிண்டி வெங்கடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ரேஸ் கிளப் கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன. அரசுப் புறம்போக்கு காலி நிலமாக உள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.