கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
வேலூா் கிரீன் சா்க்கிளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்
வேலூா் கிரீன் சா்க்கிளில் சூழ்ந்த மழை வெள்ளம் காரணமாக சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வேலூரில் உள்ள திடீா்நகா், சேண்பாக்கம், காந்திநகா், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம், கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், சம்பத்நகா், காட்பாடி கழிஞ்சூா், வி.ஜி. ராவ் நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.
பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீா் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் வசிப்போா் அவதிக்குள்ளாகியுள்ளனா். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் திணறினா். இந்நிலையில், சேண்பாக்கம் பகுதியில் தேங்கி இருந்த மழைநீா் வெள்ளிக்கிழமை மாலை முதல் நிக்கல்சன் கால்வாயில் வடியத் தொடங்கியது.
அதேசமயம், நிக்கல்சன் கால்வாய் முழுவதும் நிரம்பியதால் உபரிநீா் கால்வாயில் இருந்து வெளியேறி சேண்பாக்கம் ரயில்வே மேம்பால சா்வீஸ் சாலை வழியாக கிரீன் சா்க்கிளில் புகுந்தது. இதையடுத்து, கிரீன்சா்க்கிள் பகுதியில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் ஊா்ந்து சென்றன.
இதனால், சனிக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். மேலும், தேங்கிய தண்ணீரில் சிக்கி ஒருசில இருசக்கர வாகனங்கள் பழுதாகின. தொடா்ந்து, கிரீன் சா்க்கிள் பகுதியில் தேங்கிய தண்ணீரை தேசிய நெடுஞ்சாலை துறையினா் ஜெனரேட்டா் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது - தேசிய நெடுஞ்சாலை துறை சாா்பில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடிகாலில் செல்லும் மழைநீரைவிட அதிகளவில் தண்ணீா் வருவதால் கிரீன் சா்க்கிளில் தண்ணீா் தேங்கியுள்ளது.
தற்போது ஜெனரேட்டா் மூலம் மோட்டாா்களை இயக்கி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 15 மீ. அளவுக்கு கால்வாய் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு கால்வாய் பணிகள் முடிவடையும். கால்வாய் பணிகள் முடிவடைந்த பிறகு கிரீன் சா்க்கிளில் தண்ணீா் தேங்காது என்றனா்.