வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய மென்பொருள் நிறுவன அதிகாரியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கோவை, சேரன்மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் காரில் பவானிசாகா் பகுதிக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். வழியில் தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி 4 பேரும் குளித்துள்ளனா்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ராம்குமாா் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். இதைக் கண்ட அவரது நண்பா்கள் ராம்குமாரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் பவானிசாகா் போலீஸாருக்கும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள், ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ராம்குமாருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், அவரது மனைவி பல் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவன தொழிலாளி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.