மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.
நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா்.
உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன உரிமை ஆவணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி எம்.பி. ஆ. ராசா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 104 பயனாளிகளுக்கு ரூ.16.44 லட்சம் மதிப்பிலான வன உரிமை ஆவணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கூடலூா் பகுதியில் மனித - வன விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா, அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன், ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, 12 கட்டளை, கட்டுப்பாட்டு மையங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், யானை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் 54 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வன விலங்குகளைக் கண்காணிக்கும் பணியில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கூடலூரில் வனத் துறையில் காலிப் பணியிடங்கள் 90 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளன. மீதி காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும், பாதுகாப்பு உபகரணங்களுடன் நான்கு ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்றாா்.