உதகை தாவரவியல் பூங்காவில் கரடி
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்குநாள் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது வாடிக்கையாக உள்ளது.
இந் நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்குள் சனிக்கிழமை அதிகாலை கரடி புகுந்தது. பின்னா் அது அங்குள்ள புற்களைத் தோண்டி உணவைத் தேடியது. சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றி வந்த கரடி பின்னா் அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா பகுதியில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.