சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினரும், குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். அந்த வகையில், சனிக்கிழமை அதிகாலை தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா். பொம்மிடியில் இருந்து சேலம் வரை சோதனையிட்டனா்.
அப்போது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. அதை திறந்து பாா்த்தபோது, 30 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.
ஆனால், அந்த பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, 30 கிலோ கஞ்சாவை மீட்டு, சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.