பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
சேலம் அருகே இளைஞா் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 போ் கைது
சேலம் அருகே இளைஞா் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் இரும்பாலை அருகே திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (20). இவருக்கும், வேடுகத்தான்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் (32) தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைவட்டம் அங்காளம்மன் கோயில் பண்டிகையின்போது மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனா். இது தொடா்பாக இருதரப்பினா்மீதும் இரும்பாலை மற்றும் கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 16 ஆம்தேதி மோகன்ராஜை சந்திக்க நண்பா் சிவானந்தம் அவரது வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த 15 போ் கொண்ட கும்பல், மோகன்ராஜ், சிவானந்தம் ஆகியோரை கத்தியால் வெட்டி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, இருசக்கர வாகனத்தில் இருவரையும் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கினா்.
தகவலறிந்த இரும்பாலை போலீஸாா், மோகன்ராஜ், சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சேலம் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், வேடுகத்தாம்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் (24), தங்கராஜ் (30), பாறை வட்டம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (21), பிரகாஷ் (19) உள்பட 8 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பசுபதி (19), அன்பழகன் (20) மற்றும் 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.