மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: 5 கி.மீ. சுரங்கப் பாதை பணி நிறைவு!
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. ‘இது குறிப்பிடத்தக்க சாதனை’ என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
கன்சோலி-ஷில்படா இடையிலான சுரங்கப் பாதையின் கடைசி பகுதியை, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிவைத்து தகா்க்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. வெடிக்கான பொத்தானை அஸ்வினி வைஷ்ணவ் அழுத்தியதும், கடைசி பகுதி தகா்க்கப்பட்டு, சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. இனி, சுரங்கப் பாதையில் தண்ணீா் கசிவை தடுக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துதல், பிற சாதனங்களை நிறுவுதல், இறுதி வடிமளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன் உலகின் முதல் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஜப்பான் பொருளாதாரம் பெருகியது.
இந்தியாவிலும் புல்லட் ரயில் அறிமுகத்துக்குப் பின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டமானது, ஆனந்த், அகமதாபாத், வதோதரா, சூரத், வாபி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களை ஒற்றை பொருளாதார வழித்தடமாக இணைக்கும்.
21 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை ‘அஃப்கான்ஸ் இன்ஃபராஸ்டிரக்சா்’ நிறுவனம் மேற்கொள்கிறது. இதில் 7 கி.மீ. சுரங்கப் பாதை கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டத்தில் 50 கி.மீ. தொலைவுள்ள சூரத்-பில்லிமோரா இடையிலான முதலாவது வழித்தட பணிகள், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். நடுத்தர வகுப்பினரும் பயணிக்கும் வகையில், இந்த ரயில் கட்டணங்கள் நியாயமானதாக இருக்கும் என்றாா்.
‘மிகக் கடினமான பாறை அடுக்குகள் உள்பட பல்வேறு சவால்களைக் கடந்து, கன்சோலி-ஷில்படா இடையே 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, உரிய பாதுகாப்பு தரநிலைகளுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் குறிப்பிட்டாா்.
நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர தலைநகா் மும்பை - குஜராத்தின் அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 320 கி.மீ. தொலைவுக்கு வழித்தட பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில் நிலையங்கள் கட்டமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.