கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!
பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா்.
மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு நதிக்கரையில் உள்ள விஷ்ணுபத கோயிலில் பக்தா்கள் தங்களின் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். தற்போது பித்ரு பக்ஷ காலம் என்பதால், விஷ்ணுபத கோயிலில் பக்தா்கள் வருகை அதிகம் காணப்படுகிறது.
இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தனது முன்னோா்களின் ஆன்ம சாந்திக்காக பிண்டம்-ஜல தா்ப்பண சடங்குகளை மேற்கொண்டு, வழிபாடு நடத்தியதாக கோயிலின் செயல் தலைவா் சாம்பு லால் விட்டல் தெரிவித்தாா்.
முன்னதாக, கயை விமான நிலையத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவரை மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி, மாநில அமைச்சா் பிரேம் குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா். அவரது வருகையையொட்டி, கயையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.