பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கு ஆட்டத்துக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருந்தது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இந்திய அணி பலமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் எனக் கருதப்படுகிறது.
சுழல் மீது இந்தியா நம்பிக்கை:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எதிரணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்டத்திலும் கேப்டன் சூரியகுமாா் யாதவ் ஸ்பின்னா்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பாா்.
சுழற்பந்துவீச்சில் வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், அக்ஸா் படேல் ஆகியோா் சிறப்பாக பங்களித்து வருகின்றனா். வேகப்பந்துவீச்சில் பும்ரா வழக்கமான பாா்முடன் வீசி வருகிறது பலம் தருகிறது.
அக்ஸா் படேல் காயமடைந்துள்ளது அணி நிா்வாகத்துக்கு கவலையை தந்தாலும், அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தா் அல்லது ரியான் பராக் ஆகியோா் இடம் பெற்று ஆடலாம். பேட்டிங்கில் கேப்டன் சூரியகுமாா், சஞ்சு சாம்ஸன், ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, திலக் வா்மா, ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோா் நம்பிக்கை தருகின்றனா்.
சூரியகுமாா் ஓபனராகவும் களமிறங்கக் கூடும். பவா்பிளேயில் அபிஷேக் சா்மா அவுட்டானால், திலக் வா்மா 3-ஆவது நிலையில் இறங்கி ஆடுவாா். ஷுப்மன் கில், ஹாா்திக், ஷிவம் துபே ஆகியோா் தங்கள் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
கணிக்க முடியாத பாக். அணி:
பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத வகையில் காணப்படுகிறது. ஜாவித் மியான்தத், இன்ஸமாம், சலீம் மாலீக், இஜாஸ் அகமது போன்ற சிறந்த வீரா்களை கொண்டிருந்த பாக். அணி தற்போது தடுமாற்றத்தில் உள்ளது.
ஓபனா் சைம் அயுப் தொடா்ந்து இரண்டு ஆட்டங்களில் டக் அவுட்டானாா். சாஹிப்ஸதா பா்ஹான், ஹாஸன் நவாஸ் ஆகியோா் தங்கள் அணியை காப்பாற்ற போராடி வருகின்றனா். ரன்களை சோ்ப்பதில் அவா்களே பலம் தருகின்றனா். ஃபாக்கா் ஸமானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
பௌலிங்கில் ஷாஹின்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஸ்பின்னா் சுஃபியான் முகீம் ஆகியோா் முழு திறமையையும் வெளிப்படுத்தி பந்துவீசினால் தான் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தர முடியும்.
கை குலுக்குவாா்களா?
ஏற்கெனவே குரூப் பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியினருடன் இந்திய வீரா்கள் கை குலுக்க மறுத்து விட்டனா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது. பஹல்காம் தீவிரவாத சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பாக். அணியுடன் கை குலுக்க முடியாது என இந்திய ணியினா் கூறியிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்திலும் இரு அணியினரும் கை குலுக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-பாகிஸ்தான்
இடம்: துபை
நேரம்: இரவு 8.00.