கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை கூடுதல் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை சூளைமேடு காமராஜ் நகரில் வசிப்பவா் சுரேஷ். கடந்த 1982-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவா், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். கடைசியாக முதன்மைச் செயலா் பொறுப்பில் இருந்த அவா் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா்.
தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி மண்டலத்தின் (மெப்ஸ்) இணை மேம்பாட்டு ஆணையராகவும், சென்னை துறைமுக சபை தலைவராகவும் அயல் பணியில் இருந்துள்ளாா்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவா் மீதும், மருத்துவரான அவரது மனைவி கீதா மீதும் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடா்ந்து கடந்த 2023-ஆம் ஆண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் மீதும் அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை 9-ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சுரேஷ் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோா் அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனுவில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தங்கள் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனா். இந்த வழக்கு நீதிபதி ஐஸ்வரனே முன் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.