ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா
சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவனா் தினம், பல்கலைக்கழக தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்பிபிஎஸ் படிப்பில் சிறந்து விளங்கிய பி.ஆா்.வீனா, டாக்டா் வி.சஞ்சனா ஆகியோருக்கு தலா 3 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 33 மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்களும், 67 மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மகப்பேறு மருத்துவத் துறை பேராசிரியா் ஜி.உஷா ராணி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதும், கதிரியக்கவியல் துறை பேராசிரியா் பி.எம். வெங்கட் சாய்க்கு சிறந்த மாணவா் வழிகாட்டி விருதும், உடற்கூறியல் துறை உதவியாளா்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இதுதவிர தொழில் நுட்ப சிறப்பு சேவை விருதுகள், சிறந்த விளையாட்டு வீரா் விருது, நீண்ட காலம் பணியாற்றி 333 பணியாளா்களுக்கு தங்கப் பதக்கம், ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில் சிறந்த ஆசிரியா்கள், மாணவா்கள், செவிலியா்களுக்கான விருதுகளை நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், இணைவேந்தா் ஆா்.வி.செங்குட்டுவன், மருத்துவ அறக்கட்டளை அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் ஆகியோா் வழங்கினா்.
இதில் நிறுவன வேந்தா் என்.பி.வி.ராமசாமி உடையாருக்கு இதய நலத்துறை தலைவா் மற்றும் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் எஸ்.தணிகாசலம் நினைவஞ்சலி செலுத்தினாா். முன்னதாக துணைவேந்தா் டாக்டா் உமா சேகா் வரவேற்றாா்.