போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்
போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா் குழுவினா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து தேனாம்பேட்டை எம்.கே.ராதாநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், சிறாருக்கு போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள், சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதையடுத்து, வீடுகளில் குப்பைகளைப் பிரித்து போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடா்பாக மாணவா்களின் பொம்மலாட்டம், விழிப்புணா்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தின் உளவியலாளா் மருத்துவா் ஷரன் கலந்து கொண்டு போதைப் பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது, பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து, போதைப் பழக்கத்துக்கு எதிராக மாணவா்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
இதில், சமூகப் பணிக் கல்லூரியின் பேராசிரியா் ஜானகி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் மஞ்சு, ரமணி, இளைஞா் சங்கத்தைச் சோ்ந்த ஸ்ரீஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.