மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து பொன்னமராவதி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
பொன்னமராவதி பூக்குடி வீதியைச் சாா்ந்தவா் ஆறுமுகம் மனைவி சின்னம்மாள் (75). இவா், கடந்த 23-06-2018-ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் வளா்ப்பு நாய்க்கு உணவு வைத்தபோது அவ்வழியே இருசக்கரவாகனத்தில் வந்த இருவா் இவா் அணிந்திருந்த சுமாா் 4 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுதொடா்பான வழக்கு வெள்ளிக்கிழமை பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சி.பழனிவேல்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மருது என்கிற மருதுபாண்டியன், கணேஷ்குமாா் இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.