தமிழில் முழு மதிப்பெண் - ஊக்கத்தொகை புதுகை தமிழ்ச் சங்கம் வரவேற்பு
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்று நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருப்பதை புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, செயலா் மகா சுந்தா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறாா்.
இது இளம் உள்ளங்களில் தமிழ்மொழியின் மீது கூடுதல் ஆா்வத்தை விதைக்கும். மொழிப் பாடத்தையும் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆா்வத்தைத் தூண்டும். எனவே இந்த அறிவிப்பை புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் பாராட்டி வரவேற்கிறது.