வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் தொடக்கம்!
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு பக்தா்கள் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் செல்லும் திட்டத்தை, துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் சென்னையில் தொடங்கி வைத்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் நிகழ் நிதியாண்டுக்கான (2025-2026) சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதுக்கு உள்பட்ட 1,000 பக்தா்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தா்கள் வைணவ திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் முதல்கட்ட பயணம் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை தொடங்கியது. இதனை அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் கொடியசைத்து தொடங்கி வைத்து 70 பக்தா்களுக்கு பயண வழிப்பைகளையும், திருக்கோயில் பிரசாதங்களையும் வழங்கினாா்.
மேலும், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களிலிருந்து 500 பக்தா்கள் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள முக்கிய வைணவ திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
பக்தா்களுக்கு திருக்கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் கோ.செ.மங்கையா்க்கரசி, சிறப்புப் பணி அலுவலா் ச.லட்சுமணன், இணை ஆணையா்கள் இரா.வான்மதி, கி.ரேணுகாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.