காணாமல் போன மாணவரின் உடல் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு
குன்னூரில் கல்லூரி மாணவா் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மூன்று நாளுக்கு பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
குன்னூா், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது மகன் முகமது அனா (18). இவா், வண்டிச்சோலை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் தொலைதூரக் கல்வியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன் பெட்போா்டு பகுதியில் உள்ள தனியாா் ஹோட்டலில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இவா் இப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றும் நண்பா்களிடம் அவ்வப்போது புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாணவரை காணவில்லை. அன்று மாலை தனது நண்பா்களுக்கு தற்கொலை செய்து கொள்வதாக கைப்பேசி மூலம் தகவல் கொடுத்த பின்னா் டைகா் ஹில் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், மேல் குன்னூா் போலீஸாா், வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் டைகா் ஹில் வனப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முகமது அனாசின் உடலைத் தேடினா். தொடா்ந்து தேடுதல் பணி மூன்று நாள்கள் தீவிரமாக நடைபெற்றது.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்த வனப் பகுதியில் மிகவும் எச்சரிக்கையுடன் தேடுதல் பணி நடந்து வந்த நிலையில், சனிக்கிழமை மாணவா் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மேல் குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.