காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் விற்பனையாளா்கள், வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வரைபடம், கட்டடத்துக்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இருப்பின் பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருந்தால் ஒப்பந்தப் பத்திரம், உரிமத்துக்கான கட்டணம் ரூ. 500, அரசு கணக்கில் செலுத்தியதற்கான அசல் சலான், மனுதாரா் இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் ஆகியவற்றை இணைத்திட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவுற்றவுடன் உரிம ஆணையை பண்டிகைக்கு முன்பாக ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடைசி தேதிக்குப் பின் ஆன்லைனில் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா், வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது.