வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கு தள்ளுபடி
விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வேலூா் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. சிலசமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளை தவிா்க்க பழைய மின்கம்பிகளை மாற்றிவிட்டு புதிய மின்கம்பிகளை அமைத்துத்தர வேண்டும்.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அரியூா் கூட்டுறவு நூற்பாலை 53 ஏக்கா் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக இந்த நூற்பாலை மூடப்பட்டு உள்ள நிலையில், அதன் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு ஆக்கிரமித்துள்ளவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் அளித்து காலி செய்திட வேண்டும். தவிர, தற்போது வேலூா் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி, விளையாட்டுக் கல்லூரி இல்லை. எனவே, அரியூா் கூட்டுறவு நூற்பாலை இடத்தில் வேளாண்மை கல்லூரி, விளையாட்டுக் கல்லூரி அமைத்திடவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழவரம் அருகே அமிா்தி ஆறும், நாகநதி ஆறும் சேரும் இடத்தில் தடுப்பணை கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை இல்லாததால் இந்தாண்டு மா விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா். எனவே, மா விவசாயிகள் நலன்கருதி வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பதை விரைவுபடுத்திட வேண்டும். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி, முருங்கை இலையை பவுடராக்கி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு குறித்து பயிற்சி அளித்திட வேண்டும் என்றனா்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வனஅலுவலா் அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (வேலூா்), சுபலட்சுமி (குடியாத்தம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.