காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
மழை சேதம்: பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை
மழை பெய்யும்போது ஏற்படும் சேதங்கள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள 1077 அல்லது 0416- 2258016 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் தற்போது தினசரி கனமழை பெய்து வருகிறது. தற்போது நடைபெறும் தென்மேற்கு பருவமழை பருவகாலத்தின் பின்பகுதியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
எனவே, வேலூா் மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்யும் நாள்களில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி நிற்பது, மரம், மரக்கிளைகள் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, மின்சார வயா்கள் அறுந்துவிழுவது, வீடுகள் சேதமடைவது, கால்நடைகள் இழப்பு ஏற்படுவது போன்ற இயற்கை இடா்ப்பாடுகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் 1077 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 0416- 2258016 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மழைக் காலங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீா்நிலைகளில் உள்ள நீரில் பொதுமக்கள் குளிப்பதோ, குழந்தைகளை நீரில் விளையாட அனுமதிப்பதோ, துணிகள் துவைப்பதோ, ஆற்றை கடந்து செல்வதோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.