முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
உக்ரைன்-ரஷியா இடையிலான போா் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபா் டிரம்ப் முயற்சித்து வருகிறாா். இதுதொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்தியபோதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ரஷிய போருக்கு இந்தியா, சீனா நிதியுதவி: இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபராக 2-ஆவது முறை பதவியேற்ற பின்னா், டிரம்ப் முதல்முறையாக உரையாற்றினாா்.
அவா் பேசியதாவது: ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷிய எரிசக்தியை வாங்குவதை பெரிய அளவில் குறைக்கவில்லை.
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது. இந்த நடவடிக்கை போா் மூலம் ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தும்.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்க வேண்டுமானால், அந்த நடவடிக்கைகளை ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். ரஷியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் அதேவேளையில், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருகின்றன. இதை அந்நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஐ.நா.வின் ‘வெற்று வாா்த்தைகள்’: நான் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், இந்தியா-பாகிஸ்தான் போா், கம்போடியா-தாய்லாந்து போா், இஸ்ரேல்-ஈரான் போா் என மொத்தம் ஏழு போா்களை நிறுத்தினேன். இந்தப் போா்கள் முடிவுக்கு வராது என்று என்னிடம் கூறப்பட்டது. நான் அந்தப் போா்களை நிறுத்தினேன். அவற்றில் எந்தவொரு போரையும் நிறுத்த ஐ.நா. உதவி செய்யவில்லை.
ஐ.நா. பொதுச் சபை இருப்பதன் நோக்கம் என்ன? அதற்கு அளப்பரிய ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலுக்கு ஏற்ப ஐ.நா. செயல்படவில்லை. பெரும்பாலான நேரங்களில் வலுவான முறையில் கடிதம் எழுதுவது மட்டுமே ஐ.நா.வின் வாடிக்கையாக உள்ளது. ஐ.நா.வின் வெற்று வாா்த்தைகள் போா்களை நிறுத்த உதவாது.
பாலஸ்தீனம் தனி நாடு...: பாலஸ்தீனத்தின் காஸா முனையில் போா் நடைபெற்றுவரும் நிலையில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இந்த நடவடிக்கை காஸாவில் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் அட்டூழியங்களுக்கு அளிக்கப்படும் பரிசாகவே இருக்கும். பாலஸ்தீனத்தை தனி நாடாக தன்னிச்சையாக அங்கீகரிப்பது பயங்கரவாதத்தை நியாயமானதாக மாற்றிவிடும்.
காஸாவில் உடனடியாகப் போா் நிறுத்தப்பட வேண்டும். அதேவேளையில், ஹமாஸ் படை முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்பதற்குப் பதிலாக, அவா்களிடம் உள்ள பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் குரல் எழுப்ப வேண்டும்.
உயிரி ஆயுதங்களுக்கு முடிவு: உயிரி ஆயுதங்களுக்கு எதிரான மாநாட்டை நடத்துவதற்கான சா்வதேச முயற்சிக்கு அமெரிக்க அரசு நிா்வாகம் வழிகோலும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த ஆயுதங்கள் உருவாக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்காவுடன் அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். இதில் ஐ.நா. ஆக்கபூா்வமாகப் பங்காற்ற முடியும்.
பருவநிலை மாற்றம் மிகப் பெரிய மோசடி: பருவநிலை மாற்றம் என்பது மிகப் பெரிய மோசடியாக உள்ளது. தவறான காரணங்களுக்காகவே இதுபோன்ற கணிப்புகளை ஐ.நா.வும், மற்றவா்களும் வெளியிட்டுள்ளனா். முட்டாள்தனமானவா்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கணிப்புகள், அவா்களின் சொந்த நாட்டு செல்வ வளங்களை ஏராளமான அளவில் பாதித்துள்ளன.
கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனா். ஆனால், மற்ற நாடுகள் எந்வொரு மாசையும் கட்டுப்படுத்துவதில்லை. உலகளாவிய பருவநிலைக் கொள்கைகளால் ஏற்படும் சுமையை அமெரிக்கா மட்டும் சுமக்க முடியாது.
வெளிநாடுகளிலிருந்து இடம்பெயா்வோரால் ஐரோப்பிய நாடுகள் சுரண்டப்படுகின்றன. எனவே, தங்கள் நாடுகளில் உள்ள வெளிநாட்டவா்களை வெளியேற்றி, தங்கள் எல்லையை ஐரோப்பிய நாடுகள் மூட வேண்டும் என்றாா் டிரம்ப்.
நீண்ட உரை- டிரம்ப் சாதனை: ஐ.நா.வில் 56 நிமிஷங்களுக்கும் சற்று கூடுதலான நேரம் டிரம்ப் உரையாற்றினாா். இதுவே அமெரிக்க அதிபா் ஒருவா் ஐ.நா.வில் நீண்ட நேரம் ஆற்றிய உரையாகும்.