தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு
மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். இதன்படி, மதுரை மாவட்டத்தில் 51 மருந்தகங்கள் உள்பட தமிழகத்தில் 1,000 மருந்தகங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் இந்த மருந்தகங்களைத் திறந்து வைத்தாா். இந்தக் காணொலி, மதுரை செனாய்நகரில் உள்ள முதல்வா் மருந்தகத்தில் ஒளிபரப்பப்பட்டது.
பிறகு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மேயா் வ. இந்திராணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், மதுரை மண்டல இணைப் பதிவாளா் சு. சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்களில் 20 மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை மூலமும், 31 மருந்தகங்கள் தொழில்முனைவோா்கள் மூலமும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.