மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்ச...
மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு?' - கிராம மக்கள் புகாரால் அதிர்ச்சி
தங்கள் கிராமத்திலுள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக, அமச்சியாபுரம் கிராம மக்கள் எழுப்பியுள்ள புகார் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருப்பட்டி ஊராட்சியிலுள்ள அமச்சியாபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்திலுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்த கிராம மக்கள்,
"அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக மருத்துவ குழுவை அமைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், குடிநீர் தொட்டியை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தும் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை பயன்படுத்தாமல், சமையல் செய்யாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,
"நேற்று முன்தினம் காலை தண்ணீர் பிடிக்கும்போது குடிநீரில் கெட்ட வாடை வந்தது, ஏதோ கலந்திருப்பது போல் தோன்றியதால் சந்தேகத்தின் பேரில் நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது மனிதக்கழிவு கலந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால், தற்போதுவரை குடிநீர் தொட்டியை பார்வையிடவோ, சுத்தம் செய்யவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இரண்டு நாள்களாக குடிநீரின்றி தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்" என்றனர்.