மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு
மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இவற்றை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.
தமிழக அரசு அறிவித்த ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, மதுரை மாவட்டத்தில் 9,36,856 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகிறது. இதையொட்டி, டோக்கன் விநியோகிக்கும் பணி ஜன. 3-ஆம் தேதி தொடங்கி ஜன. 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அரசு அறிவிப்புப்படி, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்குகிறது. யா. ஒத்தக்கடையில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா்.
வருகிற 13-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறும். தினமும் முற்பகல், பிற்பகல் பணி நேரங்களில் தலா 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.