திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: நிரம்பி வழியும் ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்கம...
``மது கெடுக்கும்; கீழாநெல்லி காக்கும்'' - இதன் A to Z பலன்கள் சொல்கிறார் சித்த மருத்துவர்!
''மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மஞ்சள் நிறக் கண்கள் நினைவுக்கு வரலாம்; மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம்.
ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக் கேட்டவுடன், ஒரு சித்த மருத்துவனாக எனக்கு நினைவுக்கு வருவது அதைக் குணப்படுத்த உதவும் கீழாநெல்லிதான்! காமாலை நோயைக் குணப்படுத்த பன்னெடுங்காலமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பான மூலிகை கீழாநெல்லி.

ஈரப்பதம் நிறைந்த இடங்களில் தானாக முளைத்துப் பயன் தரும். 'மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது…’ எனும் பழமொழிக்கு ஏற்ப, கீழாநெல்லி தாவரம் சிறியதாக இருந்தாலும், அது கொடுக்கும் மருத்துவப் பலன்களோ மிக அதிகம். கீழாநெல்லியின் அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன'' என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.
கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய்நெல்லி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இலைகளுக்கு கீழ்ப்புறமாக நெல்லி வடிவில் சிறு அளவிலான காய்கள் இருப்பதால் `கீழா’ நெல்லி என்று பெயர் பெற்றிருக்கிறது.
பித்தம் சார்ந்த நோய்களின் தீவிரத்தைக் குறைக்க, குளிர்ச்சித்தன்மை பொருந்திய கீழாநெல்லியின் உதவியால் செய்யப்படும் சித்த மருந்துகள் அதிக அளவில் பயன்படுகின்றன. உடலுக்குத் தேவைப்படும் குளிர்ச்சியை வழங்குவதால் கீழாநெல்லியை 'இயற்கையின் ஏர்-கூலர்’ என்று அழைக்கலாம். சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர்ப்பாதை தொற்றுகளை நீக்கவும் கீழாநெல்லி பரிந்துரைக்கப்படுகிறது.

இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு (கசப்பு), கார்ப்பு, துவர்ப்பு எனும் அறுசுவைகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பீர்கள் அல்லவா! பொதுவாக, பல மூலிகைகளுக்கு ஏதாவது ஒரு சுவை பிரதானமாக இருக்கும். அது இனிப்பாக இருக்கலாம் அல்லது காரம், கசப்பாக இருக்கலாம். சுவை சார்ந்து கீழாநெல்லியின் சிறப்பு என்ன தெரியுமா..? கைப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு என நான்கு சுவைகளின் அற்புதக் கலவையைக் கொண்டிருக்கும் மூலிகை கீழாநெல்லி.
சித்த மருத்துவத்தில், சுவையின் அடிப்படையில் மருந்துகள் தேர்வு செய்யப்படுவதுண்டு. அந்த வித்தையை 'சுவை தத்துவம்’ என்று அழைப்பார்கள். நான்கு சுவைகளைக்கொண்ட கீழாநெல்லியை சுவை தத்துவ அடிப்படையில் பொருத்திப் பார்த்தால், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படும் எனும் உண்மை தெரியவரும். கீழாநெல்லியில் உள்ள நான்கு சுவைகளும், தனித்தும் சரி… இணைந்தும் சரி… நோய்களிடம் மாய வித்தைகளைக் காட்டும்.
கீழாநெல்லியும் மஞ்சள் கரிசலாங்கண்ணியும் மஞ்சள் காமாலை நோயை மட்டுப்படுத்தப் போராடும் இரட்டையர்கள் என்றால் அது மிகையல்ல.
கீழாநெல்லியோடு சீரகத்தைச் சேர்த்து தயிரில் கலந்து மிக்ஸியில் அடித்து 'லஸ்ஸி’ போல செய்துகொள்ளலாம். இந்த மூலிகை லஸ்ஸியை அவ்வப்போது பருக, வேனிற்காலங்களில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், கண்ணெரிச்சலுக்கான தீர்வு கிடைக்கும்.
உணவைப் பார்த்தாலே ஒரு வெறுப்பு ஏற்படும் உணர்வை அன்ன வெறுப்பு என்று சித்த மருத்துவம் அழைக்கிறது. ஏதாவதொரு நோய்நிலையால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கும்போது, உணவின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கும். 'அன்னவெறுப்பு’ குறிகுணத்துக்கு சிறிது கீழாநெல்லி, கடுக்காய், மிளகு ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து பருகலாம். அன்னவெறுப்பு, அன்னவிருப்பமாக மாறும்!

சித்த மருத்துவத்தில் எண்ணெய்க் குளியலுக்காகப் பயன்படும் தைலங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவ்வகையில் உடலில் அதிகரித்திருக்கும் பித்தத்தைக் கட்டுப்படுத்த முதலுதவி மருந்தாக கீழாநெல்லித் தைலத்தைப் பயன்படுத்தலாம். கீழாநெல்லித் தைலத்தை தலையில் தேய்த்து, வாரம் இரண்டு முறை குளித்து வர, உடலில் தேங்கிய அதிக வெப்பம் பறந்து போகும்.
தலைச்சுற்றல், கை, கால் மற்றும் கண் எரிச்சல் என்று கூறும் உறவினர்களுக்கு கீழாநெல்லித் தைலத்தின் பெருமையை எடுத்துச் சொல்லுங்கள். கூடவே எண்ணெய்க் குளியலின் பலன்களையும் அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள். வேனிற் காலத்தில் கீழாநெல்லித் தைலத்தைக் கொண்டு தலை முழுகுவதால் கோடைக்கால தொந்தரவுகளைத் தடுக்கலாம்.
ரத்தத்தை தூய்மை செய்யும் சூப்பர் சக்தி கொண்ட கீழாநெல்லி, சரும நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் சூப்பர் ஹீரோ! இதன் இலைகளோடு உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தடவலாம். வெட்டுக் காயங்களுக்கு பூசவும் கீழாநெல்லிச் சாறு பயன்படுகிறது.
கீழாநெல்லியும் மஞ்சள் கரிசலாங்கண்ணியும் மஞ்சள் காமாலை நோயை மட்டுப்படுத்தப் போராடும் இரட்டையர்கள் என்றால் அது மிகையல்ல. இதன் முழுச்செடியையும் அரைத்து, மோரில் கலந்து பருக, காமாலை நோயில் அதிகரித்திருக்கும் பித்தநீர் படிப்படியாகக் குறைவதைப் பார்க்கலாம்.
காமாலை நோயில் பல வகைகள் உண்டு. நோயின் தன்மையையும் தீவிரத்தையும் அதன் வகையையும் அறிந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி கீழாநெல்லியை எடுத்துக் கொள்ளலாம்.
மதுப்பழக்கம் காரணமாக முதலில் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல். மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க, கீழாநெல்லியை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துங்கள். அவர்களின் கல்லீரல் புத்துயிர் பெறட்டும்.
உடலுக்குள் நடைபெறும் செயல்பாடுகளால் உண்டாகும் கழிவுகள், கல்லீரலை பாதிக்காமல் கீழாநெல்லி தடுப்பதாக இன்றைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கல்லீரலை வலிமையாக்கும் மூலிகை கீழாநெல்லி என்பதை மறந்துவிட வேண்டாம். கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது.''
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...