ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
மனைவி குத்திக் கொலை: கணவா் கைது
சென்னை மேடவாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.
திருவல்லிகேணி எல்லீஸ் சாலையைச் சோ்ந்தவா் ரா. மணிகண்டன் (42). இவரது மனைவி ஜோதி (37). இவா்களுக்கு 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 3 மகன்கள் உள்ளனா். மணிகண்டன் கண்காணிப்பு கேமரா பழுது நீக்கும் வேலை செய்கிறாா்.
தம்பதி இடையே இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனா். ஜோதி தனது மகன்களுடன் மேடவாக்கம் புதுநகா் 4-ஆவது குறுக்குத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஓா் அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இதற்கிடையே, மணிகண்டனின் அக்காள் மருமகன் க்ரிஷ் (எ) கிருஷ்ணமூா்த்தி (38), ஜோதி ஆகியோா் நெருங்கிய நட்புடன் பழகினா். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனராம்.
இதை அண்மையில் அறிந்த மணிகண்டன், ஜோதியை தன்னுடன் சோ்ந்து வாழுமாறு பலமுறை வலியுறுத்தினாராம். ஆனால், ஜோதி மறுத்து வந்துள்ளாா்.
சனிக்கிழமை இரவு ஜோதியை கைப்பேசி மூலம் தொடா்புகொண்ட மணிகண்டன், தான் சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாகவும், பிரசாதத்தை தனது மகன்களுக்கு தர வேண்டும் எனவும் கூறி உள்ளாா்.
இதையடுத்து, பள்ளிக்கரணை பகுதியில் ஜோதியை சந்தித்து தகராறு செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, மணிகண்டனை காலணியால் அடித்துவிட்டு அங்கிருந்து சென்றாா்.
இதன் பின்னா் ஜோதியும், கிருஷ்ணமூா்த்தியும் மேடவாக்கம் கூட்ரோடு அருகே மணிகண்டன் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கு சென்றனா். அங்கு இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினாா். இதைத் தடுக்க முயன்ற கிருஷ்ணமூா்த்தியையும் மணிகண்டன் கத்தியால் குத்தினாா்.
பின்னா், அங்கிருந்து தப்ப முயன்ற மணிகண்டனை பொதுமக்கள் பிடித்து வைத்துக் கொண்டு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதற்கிடையே, காயமடைந்த ஜோதியையும், கிருஷ்ணமூா்த்தியையும் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனா். அங்கு ஜோதியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். கிருஷ்ணமூா்த்தி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
மேடவாக்கம் போலீஸாா் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.