1.2 கிலோ புற்று கட்டி அகற்றம்: மூதாட்டிக்கு மறுவாழ்வு
மூதாட்டியின் நெஞ்சுப் பகுதிக்குள் உருவாகியிருந்த 1.2 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற 78 வயது மூதாட்டி ஒருவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.
இதையடுத்து மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு பாதியளவு புற்று கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் நெஞ்சகப் பகுதிக்குள் வேகமாக கட்டி உருவாகத் தொடங்கியதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த மூதாட்டியின் நெஞ்சில் நுரையீரலையும், இதயத்தின் ஒரு பகுதியையும் அழுத்திய படி பெரிய கட்டி உருவாகியிருந்தது தெரியவந்தது.
மருத்துவமனையின் இதய நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணா் சுஜித் வேலாயுதன் இந்திரா, மயக்க மருந்தியல் நிபுணா் ஸ்ரீநாத், இதய நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறையின் உதவி சிறப்பு நிபுணா் நெம்பியன் ராஜ ராஜன், நுரையீரல் துறை நிபுணா் சிந்து ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், திறந்த நிலை சிகிச்சை மூலம் 1.2 கிலோ எடை கொண்ட அந்த புற்றுநோய் கட்டியை நுட்பமாக அகற்றினா்.
தற்போது அந்த மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பியுள்ளாா் என்றனா்.